கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 கிராம மக்கள் திடீர் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Nov 2019 4:00 AM IST (Updated: 14 Nov 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெண்ணெய்நல்லூர் அருகே 10 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர், 

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் திருவெண்ணெய்நல்லூர், அரசூர், சித்தலிங்கமடம் ஆகிய 3 வருவாய் குறுவட்டங்களை இணைத்து திருவெண்ணெய்நல்லூர் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு அந்த தாலுகா விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் டி.கொளத்தூர், கொண்டசமுத்திரபாளையம், பூசாரிபாளையம், ஒட்டனந்தல், பெரியசெவலை, ஆமூர், ஆமூர்குப்பம், துலங்கம்பட்டு, சரவணம்பாக்கம், கோவுலாபுரம் ஆகிய கிராமங்கள் உளுந்தூர்பேட்டை தாலுகாவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேற்கண்ட கிராமங்களை திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்க வலியுறுத்தியும் 10 கிராம மக்கள் நேற்று காலை பெரியசெவலை கூட்டுசாலையில் திரண்டனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் கிராம பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்ததை கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியபடி ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி மனித சங்கிலியாக நின்றனர்.

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிராம மக்களுடன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் எத்திராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் குமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் கோதண்டபாணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜன், தி.மு.க. நிர்வாகிகள் அறிவழகன், வடமலை, போராட்டக்குழு நிர்வாகிகள் அஜித்குமார், லட்சுமிநாராயணன், தே.மு.தி.க. ஒன்றிய நிர்வாகி சத்யராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் குமரன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை தாசில்தார் வேல்முருகன், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், அய்யனார் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமங்களை தற்போது அறிவித்துள்ள திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களது ரேஷன் கார்டுகளை அரசிடம் திரும்ப ஒப்படைப்போம் என்று கூறினர். அதற்கு இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தாசில்தார் வேல்முருகன் கூறினார். இதையடுத்து கிராம மக்கள் மற்றும் அனைத்துக்கட்சியினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக கடலூர்- சித்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story