உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி - பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியை பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகங்களில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கியது.
இதனை மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றார். நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.25 ஆயிரமும், நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக பெறப்பட்டது
இவற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டண தொகையில் பாதி தொகையை மட்டும் செலுத்தினர். இந்த விருப்ப மனுக்களை வருகிற 20-ந் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியின்போது பொன்முடி எம்.எல்.ஏ.வுடன் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story