கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் நேற்று குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. இந்த போட்டியை அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இதில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி பங்கேற்று, அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி, வாழ்த்தி பேசினார்.
இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் ரவி, ஓய்வு பெற்ற கலை ஆசிரியர் சங்கர் மற்றும் அருங்காட்சியக முன்னாள் பணியாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியினை அருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் ஒருங்கிணைந்து நடத்தினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். இதையொட்டி நேருவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மாலையில் ஒரு மணி நேரம் செல்போன், டிவியை பயன்படுத்தமாட்டேன் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாசலம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீர அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமை தாங்கினார். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நடனம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முருகையன், ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரேணுகா சரவணன், கிராமிய பள்ளி குழு தலைவி ரேகாசரவணன், முன்னாள் தலைமை ஆசிரியர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story