முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Nov 2019 4:00 AM IST (Updated: 14 Nov 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு நரிமேடு, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், சமத்துவ புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள மின்மோட்டாருடன் கூடிய சிறிய குடிநீர் தொட்டிகளும் பழுதாகி உள்ளதால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தனியார் லாரிகளில் கொண்டு வரும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும், இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப் படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நரிமேடு, பெரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், சமத்துவ புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நகராட்சி அதி காரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் முறையாக குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் எனக்கூறினார்கள். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story