உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கரூர் மாவட்ட தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனுக்களை மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பெற்றார்.
கரூர்,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க. சார்பில் உள்ளாட்சி அமைப்புக்கான பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் நவம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவங்களை, கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. வினியோகம் செய்து தொடங்கி வைத்தார். இதில் மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணை செயலாளர் வக்கீல் மணிராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளவரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆர்வத்துடன் வாங்கினர். நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.25 ஆயிரம், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500-ம், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணமாக பெறப்பட்டது. பின்னர் அந்தபடிவத்தில் எந்த பொறுப்புக்கு போட்டியிடுவது மற்றும் பெயர், விலாசம் உள்ளிட்ட சுயவிவரங்களை குறிப்பிட்டு பூர்த்தி செய்து விருப்ப மனுக்களை தி.மு.க.வினர், செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.விடம் கொடுத்தனர். தி.மு.க. தலைமை கழகம் வகுத்துள்ள விதிமுறைப்படி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு கரூரில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் பதில் தெரிவித்தார். விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு அதற்குரிய ரசீது வழங்கப்பட்டது.
இது தொடர்பாக செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 371 உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்வு இன்று (நேற்று) தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வத்துடன் விருப்பம் தெரிவித்து, கரூர் மாவட்ட தி.மு.க. தொண்டர்கள் விருப்ப மனு அளித்து வருகின்றனர். வருகிற 20-ந் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2021-ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராவது உறுதி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றார்.
Related Tags :
Next Story