திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட, என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் ரெயில் மோதி பலி


திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட, என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 14 Nov 2019 11:00 PM GMT (Updated: 14 Nov 2019 6:31 PM GMT)

கோவையில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மீது ரெயில் மோதி உடல் துண்டாகி இறந்தனர்.

கோவை,

கோவை சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் கோவை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் படித்து வருகிறார்கள். இதற்காக சூலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதே கல்லூரியில் படித்த ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி, (வயது24), கவுதம் (23) ஆகியோர் நடந்து முடிந்த தேர்வில் தோல்வி அடைந்தனர். அந்த பாடத்தை மீண்டும் எழுதுவதற்காக(அரியர்ஸ்) கோவை வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் தீன் முகமது என்பவருடைய மகன் சித்திக் ராஜா (22), நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர்(20), விஷ்வனேஷ் (22). இவர்களும் அந்த கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தனர். 5 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

தேர்வு முடிந்ததும் மாணவர்கள் 5 பேரும் ராவத்தூர் முத்துகவுண் டன்புதூர் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளனர். பின்னர் அறைக்கு சென்றனர். அதன் பின்னரும் அவர்களுக்கு மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அப்போது இரவு 10 மணியை நெருங்கி விட்டது. இதனால் 5 பேரும் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். கடையை மூடும் நேரமாகி விட்டதால் மது பாட்டில்களை வாங்கி புறப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சூலூர் அருகே உள்ள ராவத்தூர் முத்து கவுண்டன்புதூர் பகுதியில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தனர். இதில் போதை தலைக்கேறியது. இரவு 10.45 மணியளவில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

மதுபோதையில் இருந்ததால் ரெயில் வருவதை மாணவர்கள் கவனிக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் மாணவர்கள் சித்திக் ராஜா, ராஜசேகர், கருப்பசாமி, கவுதம் ஆகியோர் ரெயில் சக்கரத்தில் சிக்கி உடல்துண்டாகி 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உடல் துண்டாகி அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தன.

மாணவர் விஷ்வனேஷ் ரெயில் வருவதை பார்த்ததும் அங்கிருந்து விலகி விட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார். தனது கண்முன் சக மாணவர்கள் ரெயில் மோதி இறந்ததை கண்டதும் விஷ்வனேஷ் கதறி அழுதார்.

ரெயில் மோதி மாணவர்கள் பலியானது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்கள் பலியான தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் கோவை விரைந்து வந்தனர். உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள், சக மாணவர்கள் கதறி அழுதனர்.

ரெயில் மோதி 4 மாணவர்கள் பலியான சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story