தொப்பூர் கணவாயில் 2 லாரிகள் மோதல்; 4 டிரைவர்கள் படுகாயம் 10 எருமை மாடுகளும் காயம்
தொப்பூர் கணவாயில் 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 4 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். லாரியில் ஏற்றி வந்த 10 எருமை மாடுகளும் காயம் அடைந்தன. இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
நல்லம்பள்ளி,
ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து 20 எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் நேற்று மாலை வந்தபோது அந்த லாரிக்கு பின்புறம் மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்ததும் எருமைகள் ஏற்றிய லாரியின் பின்புறம் வெங்காய லாரி மோதியது. இந்த விபத்தில் எருமைகள் ஏற்றிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சேதம் அடைந்தது. வெங்காயம் ஏற்றிய லாரியின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் 2 லாரிகளிலும் இருந்த டிரைவர்கள் குண்டூர் ரமேஷ் (வயது 48), ஈரோடு அரிச்சலூர் சக்திவேல் (28), மாற்று டிரைவர்கள் ராஜா (21), கருணாகரன் (39) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 4 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 10 எருமைகளும் காயம் அடைந்தன.
லாரிகள் மோதிய விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து பற்றி தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story