ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு, ஆ.ராசா எம்.பி. பாராட்டு


ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு, ஆ.ராசா எம்.பி. பாராட்டு
x
தினத்தந்தி 14 Nov 2019 11:00 PM GMT (Updated: 14 Nov 2019 9:42 PM GMT)

ஊட்டியில் மருத்துவக்கல்லூரி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு, ஆ.ராசா எம்.பி. பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைய முயற்சி எடுத்த ஆ.ராசா எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியா முழுவதும் பிறப்பதற்கு முன்பே குழந்தைகள் இறப்பது, பிறக்கும்போது குழந்தைகள் இறப்பது போன்றவை குறித்து உலக சுகாதார அமைப்பு கணக்கெடுத்தது. பின்னர் இந்தியாவில் கூடுதலாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுவதும் புதியதாக 75 அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தது. குறிப்பாக தமிழகத்தில் புதிதாக 4 மருத்துவக்கல்லூரிகள் மட்டுமே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் நீலகிரி மாவட்டம் இடம் பெறவில்லை.

மலைப்பிரதேசம் என்பதாலும், மக்களின் மருத்துவ தேவையை கருத்தில் கொண்டும் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் மனு அளித்தேன். அவர் சுகாதாரத்துறை மாநிலங்களின் பட்டியலில் உள்ளதால் தமிழக அரசிடம் தெரிவியுங்கள் என்றார். உடனே தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். இதையடுத்து தமிழக அரசு நீலகிரியில் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன். நான் மக்களின் பிரதிநிதியாக இருந்து தொடர்ந்து இந்த மாவட்டத்தின் மேம்பாட்டுக்காக முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் திராவிடமணி, கணேஷ் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story