குப்பை கிடங்கில் உடல் மீட்பு வழக்கில் திருப்பம் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் எரித்து கொலை காதலன் கைது


குப்பை கிடங்கில் உடல் மீட்பு வழக்கில் திருப்பம் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் எரித்து கொலை காதலன் கைது
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 10:31 PM GMT)

குப்பை கிடங்கில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத்,

குப்பை கிடங்கில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

உடல் மீட்பு

தானே மாவட்டம் கல்யாண் பால்யாணி கிராமம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கடந்த 1-ந்தேதி பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டது உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த மோகினி (வயது19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

பேஸ்புக்கில் அறிமுகம்

மோகினி பெற்றோரை இழந்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்துள்ளார். பின்னர் ஐரோலியில் உள்ள கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார். அப்போது பேஸ்புக் மூலம் கல்யாண் பால்யாணி கிராமத்தை சேர்ந்த நிரஜ் மவுரியா (20) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. தனியாக வசித்து வரும் மோகினியை சந்திக்க நிரஜ் மவுரியா அடிக்கடி பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

காதலன் கைது

இதையடுத்து மோகினி தன்னை திருமணம் செய்யும்படி நிரஜ் மவுரியாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், சம்பவத்தன்று அவரது வீட்டுக்கு சென்று, மோகினியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக உடலை பிளாஸ்டிக் கோணிப்பையில் போட்டு குப்பை கிடங்கில் வீசி, மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பெண்ணை கொலை செய்த நிரஜ் மவுரியாவை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story