காங்கிரசைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் காணாமல் போவார்கள் - முதல்-அமைச்சர் ஆவேசம்


காங்கிரசைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் காணாமல் போவார்கள் - முதல்-அமைச்சர் ஆவேசம்
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 11:10 PM GMT)

காங்கிரசைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் காணாமல் போவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஏழை நாடாக இருந்தது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சாலை, மருத்துவம், கல்வி என பல துறைகளில் வளர்ச்சி இல்லாத நிலை இருந்து வந்தது. நேரு பிரதமர் ஆனதற்குப் பின்னர் 5 ஆண்டு திட்டங்களை கொண்டு வந்தார். மாநில அரசுகளுடன் இணைந்து மின்சார வசதி, மருத்துவ வசதி, சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்டவைகளை கொண்டுவந்தார். நீரை தேக்கி வைக்க அணைகளை கட்டினார். உணவு இல்லாத நிலையை மாற்றி பசுமை புரட்சியை கொண்டுவந்தார். பால் உற்பத்திக்காக வெண்மை புரட்சியை கொண்டுவந்தார். நேரு வகுத்த வெளியுறவு கொள்கையைதான் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்பது பொய். வளர்ச்சி இல்லை என்றால் விஞ்ஞானிகளை உருவாக்கியது யார்? பசுமை புரட்சி, வெண்மை புரட்சிகளை கொண்டு வந்தது யாருடைய ஆட்சி காலத்தில். தேசிய நெடுஞ்சாலைகளை கொண்டுவந்தது யார்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை பெயர்மாற்றி பா.ஜ.க. செய்து கொண்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்து. தற்போது அது 4 சதவீதமாக குறைந்துள்ளது. இது தான் இந்த அரசின் சாதனையா? நேருவைப் பற்றிய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

நேரு பிறந்தநாளில் காங்கிரசார் அனைவரும் நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் ஆகியோர் வழியில் நடப்போம் என உறுதியேற்போம். காங்கிரசைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் காணாமல் போவார்கள். மராட்டியத்தில் விரைவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும். மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதியில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுவோம் என பா.ஜ.க.வினர் கூறினர். ஆனால் அவர்களுக்கு 105 இடங்கள் தான் கிடைத்தது. அதுபோல் ஹரியானாவில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது என்றார்கள். ஆனால் 30 தொகுதியில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆட்சி குறித்து மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். எனவே இனிமேல் பொய் சொல்லி ஆட்சியை பிடிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

மத்தியில் எந்த அரசு இருந்தாலும் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் பிறந்தநாளை அரசியல் பாகுபாடின்றி கொண்டாடி வந்தன. ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு காங்கிரஸ் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகின்றது. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் மனதில் இருந்து அகற்றிவிடலாம் என நினைக்கின்றது. ஆனால் அகற்றிவிட முடியாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி சென்றது. ஆனால் தற்போது பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 4 சதவீதமாக உள்ளது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பிரதமரும், மத்திய உள்துறை மந்திரியும் நாடகத்தை அரங்கேற்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஏழைகள் வீடுகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை வங்கி கணக்கு தொடங்கச் செய்து வங்கிகளில் போட வைத்தனர். தற்போது அந்த பணத்தை எடுத்தால் அபராதம் பிடித்து ஏழைகளின் பணத்தை சுரண்டுகின்றனர். இதனால் ஏழைகள் அவர்களின் பணத்தை கூட எடுத்து செலவு செய்ய முடியவில்லை. பா.ஜ.க.விற்கு ஏமாந்து ஓட்டுபோட்டுவிட்டோம் என்று மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். அதைத்தான் ஹரியானா, மராட்டிய தேர்தல் முடிவு காட்டுகின்றது. காங்கிரஸ் பீனிக்ஸ் பறவைப்போல் உயிர்த்தெழுந்து வரும். காங்கிரஸ் மக்களோடு மக்களாக கலந்து விட்டது. யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் கட்சி துணை தலைவர் வினாயகமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story