காட்பாடி மாரியம்மன் கோவிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு


காட்பாடி மாரியம்மன் கோவிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 15 Nov 2019 8:42 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த 108 கிலோ ஐம்பொன் சிலையை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

காட்பாடி, 

காட்பாடியில் வள்ளிமலை ரோட்டில் உள்ள வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 108 கிலோவில் ஐம்பொன்னாலான அம்மன் சிலை செய்து வைத்தனர்.

இந்த கோவிலை சுற்றிலும் வீடுகள் உள்ளன. தினமும் பூஜைகள் ெசய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் கோவிலில் தரிசனம் செய்யும் வகையில் கோவில் திறந்தே இருக்கும்.

இந்த நிலையில் கோவிலில் ஐம்பொன் சிலை இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம கும்பல் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த 108 கிலோ ஐம்பொன் அம்மன் சிலையை திருடிச் சென்றுள்ளனர்.

நேற்று காலையில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த பூசாரி, கோவிலில் ஐம்பொன் சிலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். நிர்வாகிகள் சென்று பார்வையிட்டு இதுபற்றி காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். திருட்டுப்போன சிலையின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடி செங்குட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 28 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

அவர்கள் பிடிபடாத நிலையில் மீண்டும் காட்பாடியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன்சிலை திருட்டு போயிருப்பது காட்பாடி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story