திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை முயற்சி - கதி என்ன?
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குதித்து முதியவர் ஒருவர் தற் கொலைக்கு முயன்றார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தஞ்சை மாவட்டம் செல்வதற்கு பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அடையாளம் தெரியாத சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாலத்திலிருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் நீரில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து திருமானூர் போலீசாருக்கும், அரியலூர் தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சக்திவேல்மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருமானூர் போலீசார் முதியவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
முதியவர் பாலத்தில் இருந்து நீரில் குதித்ததை பார்த்தவர்கள் கூறுகையில், முதியவர் கோல் ஊன்றி பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். சரியாக நீரோட்டம் உள்ள இடத்தில் நின்று அவரது ஊன்று கோலையும், காலணியையும் அந்த இடத்திலேயே கழற்றி வைத்துவிட்டு திடீரென மேலிருந்து கீழே குதித்துவிட்டார் என்று கூறினர். இரவு 7 மணி வரை நடைபெற்ற தேடுதல் பணியில் முதியவரை மீட்க முடியவில்லை.
அதற்கு மேல் இருள் சூழ்ந்ததால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை காலை (அதாவது இன்று) 7 மணியிலிருந்து மீண்டும் தேடுதல் பணி நடைபெறும் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Related Tags :
Next Story