கோவையில், குடோனில் பதுக்கிய ரூ.75 லட்சம் குட்கா பறிமுதல் வடமாநிலத்தை சேர்ந்த அண்ணன்-தம்பி கைது
கோவையில் குடோனில் பதுக்கிய ரூ.75 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த அண்ணன் -தம்பி கைது செய்யப்பட்டனர்.
கோவை,
பெங்களூருவில் இருந்து சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி கோவை புறநகர் பகுதியில்பதுக்கி வைத்து விற்பனைசெய்வதாக பல்வேறு புகார்கள் வந்தன. மேலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய பல கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.இந்த சம்பவம்குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கோவை-சத்தி சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்குவேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்காபுகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சேத்தாராம் (வயது 42), மோதிலால்(38) என்றும் அவர்கள் அண்ணன்-தம்பி என்றும் தெரியவந்தது . ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேத்தாராம் கோவை தெலுங்கு பாளையத்திலும், மோதிலால் சோமனூரிலும் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெங்களூருவில் இருந்துசத்திரோடு வழியாக குட்காவை வேனில் கடத்தி இங்குள்ள குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பிரிபாளையம் பகுதியில் உள்ள குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கும் மூட்டை மூட்டையாக குட்கா அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
வேன் மற்றும் குடோனில் இருந்து 70 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்புரூ.75 லட்சம் ஆகும். குட்கா பொருட்களை கோவை,திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் இவர்கள் வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது. கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா கடத்தல் கும்பலுடன் மேலும் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் உணவு பாதுகாப்புத் துறைநியமன அதிகாரி தமிழ்செல்வன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறைஅதிகாரி காமராஜ் தலைமையிலான அதிகாரிகள் சுந்தராபுரம், வைசியாள் வீதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 81 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story