வாகனத்தில் தப்பிச்செல்லும் குற்றவாளிைய பிடிக்க புதிய செயலி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


வாகனத்தில் தப்பிச்செல்லும் குற்றவாளிைய பிடிக்க புதிய செயலி - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:00 PM GMT (Updated: 15 Nov 2019 7:24 PM GMT)

இந்தியாவிலேயே முதல்முறையாக, வாகனங்களில் தப்பிச்செல்லும் குற்றவாளிகளை பிடிக்க உதவும் புதிய செயலியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவகங்கை,

மாவட்டத்தில் ஏற்கனவே போலீசாரின் இரவு ரோந்து பணிகளை கண்காணிக்கவும், குற்றம் நடைபெறும் இடங்களுக்கு அருகில் ரோந்து பணியில் உள்ள போலீசாரை விரைந்து அனுப்பவும் வசதியாக ‘இ-பீட்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் வாகனங்களில் தப்பி செல்லும் போதும் ஆட்களை வாகனங்களில் கடத்தி செல்லும் போதும் அவர்களை விரைந்துபிடிக்க ஏதுவாக ‘டோல் ஸ்கோப்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த செயலி சிவகங்கை மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து செயல்பட்டு வரும் இந்த செயலியுடன், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போலீசாரின் குற்ற பிரிவு செயலியும் சேர்த்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுடன் இணைக்கப்படும்.

குற்றவாளிகள் தப்பி செல்லும் வாகனங்கள் குறித்த விவரத்தை இந்த செயலியில் பதிவு செய்தால், அது உடனடியாக செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பதிவு செய்யப்படும். தொடர்ந்து போலீசார் தேடும் வாகனம் சுங்கச்சாவடி பகுதியில் வந்தால் உடனடியாக அந்த விவரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வரும் இதன்மூலம் உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க முடியும்.

தமிழகத்தில் தற்போது 26 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த புதிய செயலியுடன் கீழசீவல்பட்டி சுங்கச்சாவடி, புதுக்கோட்டை அருகேயுள்ள சுங்கச்சாவடி, மேலூர் சுங்கச்சாவடி, திருப்புவனம் அருகேயுள்ள சுங்கச்சாவடி, பரமக்குடியில் உள்ள சுங்கச்சாவடி, திருச்சி அருகேயுள்ள சுங்கச்சாவடி மற்றும் கீரனூர் சுங்கச்சாவடி அகிய 7 சுங்கச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து பதிவு செய்யப்படும் தகவல் ஒரே நேரத்தில் 7 சுங்கச்சாவடிகளிலும் பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

தொடர்ந்து புதிய செயலியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

பேட்டியின் போது தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா, ராதாகிருஷ்ணன், சபரிதாசன் ஆகியொர் உடனிருந்தனர். 

Next Story