ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், தாமாக முன்வந்து அந்த இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள்


ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், தாமாக முன்வந்து அந்த இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Nov 2019 3:30 AM IST (Updated: 16 Nov 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக முன்வந்து அதனை காலி செய்து அந்த இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து நீர் நிலைகள் தொடர்பாக ‘நீர் பதிவு’ என்ற புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி புதிய செயலியை தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் புதுவை அரசின் வேளாண்துறை, சுற்றுச்சூழல் துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டது.

புதுவையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. நீரின் தன்மையும் மாறியுள்ளது. எனவே நகர பகுதிகளில் உள்ள தண்ணீரை குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை. எனவே தான் நீரும், ஊரும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள், சமூக இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்த திட்டம் முதல் முதலாக வில்லியனூர் தொகுதி மூர்த்திகுப்பம் குளத்தில் இருந்து தொடங்கப்பட்டது. தற்போது புதுவையில் 144 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இன்று(நேற்று) காலையில் ஒதியம்பட்டில் ஒரு குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தோம். தூர்வாரிய குளங்கள் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி, நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இந்த பணிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்வந்து பணியாற்றுகின்றனர். அவர்களுக்கும், துறையின் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

காரைக்காலில் வேளாண்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் நடவடிக்கையால் 188 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மக்களிடம் வரவேற்பு, மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

வீடுகள் கட்டவும், சாலைகள் அமைக்கவும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. தூர்வாருவதோடு மட்டுமின்றி நீர்நிலைகளில் தண்ணீரை பெருக்க வேண்டும். அதற்கு மழை பெய்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இது மக்கள் அனைவரின் கடமை. இதே போல் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் சுத்தமான காற்றை சுவாசிக்க கூட முடியவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நமது வாரிசுகளுக்கு சொத்துகளை சேகரித்து வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், சுகாதாரமான காற்று, மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இதனை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

தற்போது நீர்நிலைகளை கண்டறிந்து அரசு, சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தூர்வாரி வருகிறோம். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அரசு அகற்றினாலும், அதில் மக்கள் பங்களிப்பு அவசியம். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை காலி செய்து அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு துறைகள் கூட ஒரு சில இடங்களை ஆக்கிரமித்து உள்ளன. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story