குளச்சல் அருகே, தாலி தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 9¼ பவுன் நகை அபேஸ் - குடுகுடுப்பைகாரனுக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சல் அருகே தாலி தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 9¼ பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு தப்பிச் சென்ற குடு குடுப்பைகாரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குளச்சல்,
குளச்சல் அருகே இருப்பிலி சரல்விளையை சேர்ந்தவர் பெனிராஜன், கொத்தனார். இவருடைய மனைவி ஸ்டெபியா மேரி (வயது 28). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய வீட்டின் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு குடு குடுப்பைகாரன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் குடியேறினான்.
நேற்று முன்தினம் காலை திடீரென அந்த குடுகுடுப்பைகாரன், ஸ்டெபியா மேரி வீட்டுக்கு சென்று தாலிதோஷம் இருப்பதாகவும், கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினான். மேலும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினான்.
இதை உண்மை என நம்பிய ஸ்டெபியாமேரி, பூஜை செய்ய சம்மதித்தார். அதன்படி உடனே, பரிகார பூஜை வீட்டில் நடத்தப்பட்டது. அப்போது, பூஜையில் அமர்ந்திருந்த குடுகுடுப்பைகாரன், ஸ்டெபியாமேரி முன்பு ஒரு மண் கலசத்தை வைத்து அணிந்திருக்கும் தாலி மற்றும் வீட்டில் உள்ள அனைத்து நகையையும் அதற்குள் போடுமாறு கூறினான். அதன்படி தாலி உள்ளிட்ட 9¼ பவுன் நகையை கலசத்தில் போட்டார். உடனே மஞ்சள் துணியால் மூடி கட்டி விட்டு, உப்பும், தண்ணீரும் எடுத்து வருமாறு கூறினான்.
அதை ஸ்டெபியாமேரி எடுத்து வந்தார். அதை வாங்கி விட்டு நாளை(அதாவது நேற்று)காலையில் தான் திறந்து பார்க்க வேண்டும். அதற்கு முன் திறந்து பார்த்தால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரத்தம் வாந்தி எடுத்து இறந்து விடுவீர்கள் என்று கூறி சென்றான்.
நேற்று காலை ஸ்டெபியா மேரி, குடுகுடுப்பை காரன் கூறியபடி கலசத்தை திறந்து பார்த்தார். அப்போது, அதற்குள் நகைகளுக்கு பதில் கல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, குடு குடுப்பைகாரன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு வீடு பூட்டி கிடந்தது. உப்பும், தண்ணீரும் எடுத்து வருவதற்குள், குடுகுடுப்பைகாரன் தயாராக எடுத்து வந்த மற்றொரு கலசத்தை வைத்து விட்டு நகை உள்ள கலசத்தை தூக்கிச் சென்றது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து ஸ்டெபியாமேரி குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து தாலிதோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 9¼ பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு குடும்பத்துடன் தப்பிச் சென்ற குடுகுடுப்பைகாரனை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story