15 தொகுதிகளிலும் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள் குமாரசாமி பேட்டி


15 தொகுதிகளிலும் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2019 5:45 AM IST (Updated: 16 Nov 2019 5:45 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்கள் குறிக்கோள் என்று குமாரசாமி கூறினார்.

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் இடைத்தேர்தல் குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பாடம் புகட்ட...

எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசை கவிழ்த்த கே.ஆர்.பேட்டை தொகுதி தகுதி நீக்க எம்.எல்.ஏ. நாராயணகவுடாவை தோற்கடிக்க ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் ராணுவ வீரர்களை போல் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியது அவசியம்.

ஒசக்கோட்டை தொகுதியில் சரத் பச்சேகவுடாவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளோம். மீதமுள்ள 14 தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது. 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். இன்னும் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறோம்.

விவசாய கடன் தள்ளுபடி

நாட்டில் எந்த மாநிலத்திலும் செய்யாத அளவுக்கு கர்நாடகத்தில் ரூ.48 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளேன். இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் நிம்மதியாக வாழ வகை செய்துள்ளேன். இந்த கே.ஆர்.பேட்டை தாலுகாவின் வளர்ச்சிக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கினேன்.

நான் கொடுத்த நிதியை, எடியூரப்பா ஒதுக்கியதாக நாராயணகவுடா கூறிக்கொண்டு சுற்றுகிறார். அவரை தோற்கடிக்காமல் விடமாட்டோம். 15 தொகுதிகளிலும் பா.ஜனதாவை தோற்கடிப்பதே எங்கள் கட்சியின் குறிக்கோள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story