நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2019 11:00 PM GMT (Updated: 16 Nov 2019 2:54 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கோபி மற்றும் நம்பியூர் தாலுகாக்களை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ரூ.23 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன், தாசில்தார்கள் ஜெயராமன், விஜயகுமார், வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, குணசேகரன், பாவேசு, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பிசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வரவேற்று பேசினார்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் 3 ஆயிரத்து 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.

தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 500 கோடி செலவாகிறது. கோபி சட்டமன்ற தொகுதியில் 3 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அது விரைவில் பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும். அரசு பள்ளிக்கூடங்களில் கரும்பலகைகளுக்கு பதிலாக 92 ஆயிரம் ஸ்மார்ட் பலகைகள் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளன.

மேலும் 7 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்படும். இதுவரை 250 பள்ளிக்கூடங்களில் அடல் டிங்கர் லேப் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,000 பள்ளிக்கூடங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் இந்த வசதி விரைவில் செய்து தரப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. கோபியில் ரூ.52 கோடி செலவில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ரூ.328 கோடி மதிப்பீட்டில் சித்தோடு முதல் சத்தியமங்கலம் வரையிலும், பவானியில் இருந்து அத்தாணி வழியாக சத்தியமங்கலம் வரையிலும் 4 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள சில இடர்பாடுகள் விரைவில் சரிசெய்யப்படும். நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்திற்கு வேண்டாம் என்பதுதான் அரசின் முடிவாக உள்ளது. அதை ரத்து செய்யக்கோரி நாங்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story