கோவையில் கூட்டுறவு வார விழா: 377 பேருக்கு ரூ.8¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்


கோவையில் கூட்டுறவு வார விழா: 377 பேருக்கு ரூ.8¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 17 Nov 2019 4:15 AM IST (Updated: 16 Nov 2019 8:31 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 377 பேருக்கு ரூ.8¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை,

கோவை மாவட்ட அளவிலான 66-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, விபி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 377 பேருக்கு ரூ.8¼ கோடியில் கடனுதவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அவர்,, துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் நுண்ணூட்ட சத்து கலவை உரம் உற்பத்தி நிலையம், செக்கு எண்ணெய் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்பட மொத்தம் 815 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏழை-எளிய மக்களின் வாழ்வு மேம்பட கூட்டுறவு சங்கத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதில் நமது மாநிலம் முதல் மாநிலமாக திகழ்கிறது. மாநிலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்குவதுடன் கறவை மாட்டுக்கடன், டிராக்டர் கடன், சொட்டுநீர் பாசன கடன் போன்ற வேளாண் முதலீட்டு கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ரேஷன் கடைகளை நடத்துவதுடன், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் கூட்டுறவுகள் முக்கிய பங்காற்றுகிறது.

66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வருகிற 20-ந் தேதி வரை நடக் கிறது. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 23,416 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.124 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பயிர் காப்பீடு செய்த 1,385 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 89 லட்சம் இழப்பீடு தொகை, 546 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 கோடியே 77 லட்சத்தில் கடன் உள்பட ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு ரூ.533 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.

கூட்டுறவுத்துறை நடத்தும் 157 பொது இ-சேவை மையங்கள் மூலம் 2 லட்சத்து 17 பேருக்கு சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், சிட்டா அடங்கல், பட்டா மாறுதல் உள்பட பல்வேறு சேவைகளை பெற்று பயன் அடைந்து உள்ளனர். இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கோவை பெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பழனிசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் இந்துமதி, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தலைவர் கே.பி.ராஜூ மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story