கடலோர கிராமங்களில் தடுப்புசுவர் கட்ட நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன் - குளச்சலில் வசந்தகுமார் எம்.பி. பேச்சு


கடலோர கிராமங்களில் தடுப்புசுவர் கட்ட நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன் - குளச்சலில் வசந்தகுமார் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 16 Nov 2019 10:45 PM GMT (Updated: 16 Nov 2019 3:25 PM GMT)

கடலோர கிராமங்களில் தடுப்பு சுவர் கட்ட நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன் என்று குளச்சலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. பேசினார்.

குளச்சல், 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார் எம்.பி. குளச்சலில் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

குமரி மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் நான் 22 முறை பேசியுள்ளேன். கடல் சீற்றத்தினால் கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் தடுப்பு சுவர் கட்ட வலியுறுத்தியுள்ளேன். குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க இடமில்லை. கடலில் 2 ஆயிரம் கி.மீ. சதுர பரப்பில் ராட்சத கற்கள் போட்டு தேவையான இடத்தை எடுப்போம் என அவர்கள் கூறினார்கள். அதற்கு தேவையான கற்கள் எங்கிருந்து கிடைக்கும். வியாபாரிகளின் நலன் கருதி ஜி.எஸ்.டி. வரியை குறைக்க போராடி வருகிறேன்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஜனவரி மாதம் 5-ந் தேதி நூருல் இஸ்லாம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் அந்திரியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story