‘ஸ்ட்ராபெரி’ நாற்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


‘ஸ்ட்ராபெரி’ நாற்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Nov 2019 10:30 PM GMT (Updated: 16 Nov 2019 4:19 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்து ‘ஸ்ட்ராபெரி’ நாற்றுகளை பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

ஊட்டி, 

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள் மற்றும் இதர துறையினை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டன. மேலும் 26 கோரிக்கை மனுக்கள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பாக கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டில் அரசிடம் இருந்து 50 ஏக்கர் அளவிற்கு ‘ஸ்ட்ராபெரி’ நாற்றுகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தலா ஒரு ஹெக்டருக்கு ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்க ஆணை பெறப்பட்டு உள்ளதால், ஸ்ட்ராபெரி நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை பெற இ-சேவை மையத்தில் பதிவுகள் மேற்கொள்வதற்கான பயிற்சிகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிற 21-ந் தேதி முதல் அந்தந்த வட்டார இ-சேவை மையத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகள் பயன் அடையலாம்.

இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

Next Story