இரணியல் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை
இரணியல் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
அழகியமண்டபம்,
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் இரணியல் ரெயில் நிலையமும் ஒன்று. இங்கிருந்து தினமும் ஏராளமான பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்கிறார்கள். இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் ஏராளமான பயணிகள் ரெயிலுக்காக காத்திருந்தனர். அவர்களில் 40 வயதுடைய பயணி ஒருவர் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஏதோ ஒரு பொருள் காலில் தட்டுப்பட்டு உருண்டு ஓடியது. அந்த பொருளை பயணி எடுத்து பார்த்தபோது அது துப்பாக்கி குண்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து, அந்த குண்டை ரெயில்நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்தார். மேலும், இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அது துப்பாக்கி குண்டுதான் என்பதை உறுதி செய்தனர். இது ரெயில் நிலையத்துக்கு எப்படி வந்தது என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் துப்பாக்கி குண்டை கைப்பற்றி நாகர்கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
பயணிகள் யாராவது துப்பாக்கியுடன் வந்த போது, குண்டு மட்டும் கீழே விழுந்ததா? அல்லது அந்த பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் நிலையத்தில் துப்பாக்கி குண்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story