குளித்தலை அருகே, ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் சாவு - போலீசார் விசாரணை
குளித்தலை அருகே ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடியவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நெற்றி, காது, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் நேற்று முன்தினம் இரவு கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து, படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் பரிதாபமாக இறந்தார். அவர் இறக்கும் முன்பு தனது பெயர் கருணாமூர்த்தி என்றும் ஊர் தேவதானம் என்று கூறினாராம். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் கிருஷ்ணராயபுரம் வட்டம் பழையஜெயங்கொண்டம் அருகே உள்ள எம்.புதுபட்டியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் கருணாமூர்த்தி (வயது 41) என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது. கருணாமூர்த்தியின் உடலில் வெட்டுக்காயங்கள் போல் காணப்படுவதால் அவரை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்கில் வெட்டிவிட்டு தப்பிசென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல சாலையை கடக்கும் முன்பு அடையாளம் தெரியாத வாகனம் ஏதேனும் மோதி கருணாமூர்த்தி அடிபட்டாரா எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் கருணாமூர்த்தியின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தா?, கொலையா? என தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Related Tags :
Next Story