டிப்-டாப் உடை அணிந்து வந்து டாஸ்மாக் ஊழியர்களை ஏமாற்றி ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் பறித்தவர் கைது
டிப்-டாப் உடை அணிந்து வந்து டாஸ்மாக் ஊழியர்களை ஏமாற்றி ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் மற்றொரு கடையில் கைவரிசை காட்ட முயன்றபோது சிக்கினார்.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள சூரிபாளி என்ற இடத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்தகடையினை நேற்று காலை ஊழியர்கள் திறந்து, நேற்று முன்தினம் இரவு மது விற்ற பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கணக்கு பார்த்து கொண்டிருந்தனர். அப்போது டிப்-டாப் உடை அணிந்து கொண்டு ஆசாமி ஒருவர் வந்து, நான் அதிகாரி என்றும், இப்போது கடையை ஏன் திறந்து வைத்துள்ளர்கள் என்று கேட்டு கொண்டிருந்தார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள் உடனடியாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த நபரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த நபர் சென்னை அமைந்தகரை முத்துமாரியம்மன் காலனி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (வயது 48) என்பதும், கடந்த மார்ச் மாதம் அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் இதேபோல் டிப்-டாப் உடை அணிந்து வந்து நான் அதிகாரி என கூறி, அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அரவக்குறிச்சி போலீசார் கஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story