பெங்களூருவில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் பா.ஜனதாவில் அதிருப்தியாளர்கள் இல்லை மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி
பெங்களூருவில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் பா.ஜனதாவில் அதிருப்தியாளர்கள் இல்லை என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் பா.ஜனதாவில் அதிருப்தியாளர்கள் இல்லை என்று எடியூரப்பாவை சந்தித்த பின்பு மத்திய மந்திரி சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவுடன் சந்திப்பு
கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியும் ஒன்றாகும். அங்கு பா.ஜனதா சார்பில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.வான சோமசேகர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி சதானந்தகவுடா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு நேற்று காலையில் மத்திய மந்திரி சதானந்தகவுடா சென்றார். பின்னர் அவர், எடியூரப்பாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் பா.ஜனதா பிரமுகர்களை சமாதானப்படுத்துவது குறித்து எடியூரப்பாவும், சதானந்தகவுடாவும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அதிருப்தியாளர்கள் இல்லை
பெங்களூரு வடக்கு தொகுதியின் எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்து வருகிறேன். பெங்களூரு வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், மகாலட்சுமி லே-அவுட் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் பா.ஜனதாவில் அதிருப்தியாளர்கள் யாரும் இல்லை. அந்த தொகுதிகளில் அதிருப்தியாளர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழ்நிலை இருக்கிறது.
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் எங்கள் வீட்டுக்கு (பா.ஜனதாவுக்கு) வந்துள்ளனர். அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு வழங்கியுள்ளது. இடைத்தேர்தலில் அவர்களை வெற்றி பெற செய்வது பா.ஜனதாவினரின் பொறுப்பு. அதற்காக ஒற்றுமையாக இருந்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்காக பா.ஜனதாவினர் உழைப்பார்கள்.
பா.ஜனதா வெற்றி உறுதி
யஷ்வந்தபுரம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டு உள்ளேன். அந்த தொகுதியில் உள்ள பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன். அங்கு பா.ஜனதா சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சோமசேகருக்கு கட்சி தொண்டர்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். மகாலட்சுமி லே-அவுட், கே.ஆர்.புரம் தொகுதிகளிலும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை.
மகாலட்சுமி லே-அவுட் தொகுதி வேட்பாளர் கோபாலய்யாவுக்கும், முன்னாள் துணை மேயர் ஹரீசுக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. கோபாலய்யாவும், ஹரீசும் சந்தித்து பேசியுள்ளனர். கோபாலய்யாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்று ஹரீஷ் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.
Related Tags :
Next Story