காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக டி.கே.சிவக்குமார், லட்சுமி ஹெப்பால்கரே காரணம் பா.ஜனதா வேட்பாளர் ரமேஷ் ஜார்கிகோளி பேட்டி
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கு டி.கே.சிவக்குமார் மற்றும் லட்சுமி ஹெப்பால்கரே காரணம் என்று பா.ஜனதா வேட்பாளர் ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதற்கு டி.கே.சிவக்குமார் மற்றும் லட்சுமி ஹெப்பால்கரே காரணம் என்று பா.ஜனதா வேட்பாளர் ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.
பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளரும், தகுதி நீக்க எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் ஜார்கிகோளி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
டி.கே.சிவக்குமார் தலையீடு
பெலகாவி அரசியலில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையீடு அதிகஅளவில் இருந்தது. இதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் பலமுறை புகார் அளித்தேன். ஆனாலும் பெலகாவி அரசியலில் டி.கே.சிவக்குமாரின் தலையீடு தொடர்ந்த வண்ணம் இருந்தது. இது எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. சட்டசபை தேர்தலில் பெலகாவி மாவட்டத்தில் போட்டியிட லட்சுமி ஹெப்பால்கருக்கு சீட் வழங்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர்களை வலியுறுத்தினேன். அவருக்கு சீட் வழங்கி காங்கிரஸ் மேலிடம் தவறு செய்துவிட்டது.
அதன்பிறகு, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் லட்சுமி ஹெப்பால்கருக்கு எந்த விதமான பதவியும் வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். எனது பேச்சை கேட்காமல் லட்சுமி ஹெப்பால்கருக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் லட்சுமி ஹெப்பால்கரை விட மூத்த தலைவராக நான் இருந்தேன். எனது தலை மீது லட்சுமி ஹெப்பால்கரை உட்கார வைத்து வேடிக்கை பார்க்கப்பட்டது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
15 தொகுதிகளிலும் வெற்றி
லட்சுமி ஹெப்பால்கருக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு டி.கே.சிவக்குமாரே காரணம். பெலகாவி அரசியலில் டி.கே.சிவக்குமார் தலையிட்டதுடன், என்னை ஓரங்கட்டும் முயற்சிகளும் நடைபெற்றது. கூட்டணி ஆட்சியில் டி.கே.சிவக்குமார் சொல்வதை கேட்டே காங்கிரஸ் தலைவர்களும் செயல்பட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துள்ளேன். நான் காங்கிரசில் இருந்து விலகுவதற்கு டி.கே.சிவக்குமாரும், லட்சுமி ஹெப்பால்கரும் தான் காரணம்.
கோகாக் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கோகாக் தொகுதி எம்.எல்.ஏ. ஆவேன். இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
Related Tags :
Next Story