திரைப்படத்துக்கு முன்பாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்ப நடவடிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


திரைப்படத்துக்கு முன்பாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்ப நடவடிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 17 Nov 2019 3:30 AM IST (Updated: 17 Nov 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

திரைப்படத்துக்கு முன்பாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி, 

திரைப்படத்துக்கு முன்பாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவிலேயே அதிக நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி முதலிடத்தில் உள்ளார். மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதேபோன்று கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போதிய மருந்து-மாத்திரைகள் இருப்பில் உள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. உள்ளாட்சி தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அனைத்து பிரிவினருக்கும் வார்டுகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதைவிட வெளிப்படைத்தன்மையுடன் எப்படி செயல்படுவது என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்தான் கூற வேண்டும்.

திருக்குறள் ஒளிபரப்பு

முன்பு திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக, திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்பப்பட்டது. அதேபோன்று தற்போதும் திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் ஒளிபரப்பு செய்வதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்படும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடங்களை அவர்களால்தான் நிறைவு செய்ய முடியும். அவர்களுக்கு பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால்தான், ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்பி விட்டனர்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைப்பதற்காக பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குழு அமைக்கப்பட்டு உள்ளது. புத்தாண்டுக்குள் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

முன்னதாக அவர் ஸ்ரீவைகுண்டத்தில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடாது. இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. கோவில்களில் கலைநயத்துடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கொச்சைப்படுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார். அவர் சிற்பங்களை பார்க்கும் பார்வையில்தான் குறைபாடு உள்ளது, என்றார்.

Next Story