நெல்லையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பாளையங்கோட்டையில் 100 மி.மீ. பதிவு


நெல்லையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது பாளையங்கோட்டையில் 100 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 17 Nov 2019 4:15 AM IST (Updated: 17 Nov 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாளையங்கோட்டை, சேரன்மாதேவி பகுதியில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நெல்லை, 

நெல்லையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பாளையங்கோட்டை, சேரன்மாதேவி பகுதியில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கனமழை எச்சரிக்கை

வெப்பசலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, அம்பை, தென்காசி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

இதில் பாளையங்கோட்டையில் 100 மில்லி மீட்டர் மழையும், நெல்லையில் 83 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், மேலப்பாளையம் பகுதியிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலப்பாளையம் மாட்டுச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

நெல்லை டவுன் போஸ் மார்க்கெட், வடக்கு ரதவீதி, பொருட்காட்சி திடல், காட்சி மண்டபம் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் சிரமப்பட்டனர். தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவில் மழை நீர், கால்வாய் நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது.

நெல்லை தச்சநல்லூர் அழகநேரி வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி ஊர்களுக்குள் புகுந்தது. இதனால் கரையிருப்பு, சிதம்பரநகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சிதம்பரநகரில் உள்ள குளம் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. கரையிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குவித்து வைத்திருந்த நெல், தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகளை சரிசெய்து தண்ணீர் வடிவதற்கான பணிகளை துரிதப்படுத்தினார்கள். மேலும், உலகம்மன் கோவில் அருகே நெல்லை கால்வாயில் உள்ள ஐந்துகண் மதகுகளை பொதுமக்கள் திறந்து தண்ணீர் வெளியேற்றினர்.

மறியல் போராட்டம்

இதேபோல் பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளைநகர், ஆசாத்நகர், திருமலைநகர், காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தச்சநல்லூர் கரையிருப்பு பகுதி மக்கள், ஊருக்குள் புகுந்த மழைநீரை வடியவைக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் சுப்பிரமணியன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இதேபோல் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, திருக்குறுங்குடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இது நேற்று காலை வரை நீடித்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மதியம் பாபநாசம் அணைப்பகுதியில் 43 மில்லி மீட்டர் மழை பெய்தது. களக்காடு, திருக்குறுங்குடி பகுதிகளில் பெய்த மழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அம்பை, சேரன்மாதேவி, சிவகிரி, தென்காசி பகுதிகளிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 128.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,204 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு, அடவிநயினார் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைகளுக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வருவதாலும், அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதாலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 129.07 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65.40 அடியாகவும் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 81.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 75.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.96 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 7 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 40 அடியாகவும் உள்ளது.

குற்றாலம்- மணிமுத்தாறு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் மதியம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 2,600 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாளையங்கோட்டை-100, சேரன்மாதேவி-100, நெல்லை- 83, ராதாபுரம்-53, பாபநாசம்-48, மணிமுத்தாறு-47, நம்பியாறு-43, சிவகிரி-40, சேர்வலாறு-29, அம்பை-28, கொடுமுடியாறு-25, களக்காடு-22, மூலைக்கரைப்பட்டி-16, கருப்பாநதி-15, அடவிநயினார்-6, நாங்குநேரி-5.5, தென்காசி-3, செங்கோட்டை-2, சங்கரன்கோவில்-1.

Next Story