அரக்கோணத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.65 ஆயிரம் திருட்டு - வாலிபருக்கு வலைவீச்சு


அரக்கோணத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து முதியவரிடம் ரூ.65 ஆயிரம் திருட்டு - வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Nov 2019 4:00 AM IST (Updated: 17 Nov 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் முதியவரிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றிக் கொடுத்து வங்கிக்கணக்கில் ரூ.65 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் நேருஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 69). இவரது தம்பி உமாபதி (64), மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 5-ந் தேதி தனது வங்கி ஏ.டி.எம். கார்டை அண்ணன் மோகனிடம் கொடுத்து பணம் எடுத்து கொண்டு வா என்று கூறி அனுப்பி உள்ளார்.

இதையடுத்து மோகன் அரக்கோணம்- சோளிங்கர் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.5 ஆயிரத்தை எடுத்து உள்ளார். பின்னர் அங்கிருந்து சிகிச்சை பெறுவதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவமனை அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.10 ஆயிரம் எடுத்து உள்ளார்.

மாலையில் அரக்கோணம் வந்து சோளிங்கர் சாலையில் உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.10 ஆயிரம் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பணம் வரவில்லை. உடனடியாக மோகன் ஏ.டி.எம். மையத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தர கூறினார்.

அந்த வாலிபர் கார்டை வாங்கி மி‌ஷினில் போட்டு பார்த்த போது பணம் வரவில்லை. மோகனிடம் பணம் வரவில்லை என்று கூறி அவர் கொடுத்த கார்டை கையில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை அவரிடம் வாலிபர் கொடுத்துள்ளார். கார்டை வாங்கி கொண்டு மோகன் வீட்டிற்கு வந்து விட்டார்.

முதியவரிடம் இருந்து கார்டை பெற்று சென்ற வாலிபர் அந்த கார்டை பயன்படுத்தி 6,7,8 ஆகிய தேதிகளில் மொத்தம் ரூ.65 ஆயிரம் எடுத்து உள்ளார். பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி உமாபதியின் செல்போனுக்கு வந்தது.

இதை பார்த்த உமாபதி, மோகனிடம் வங்கிக்கணக்கில் இருந்து 65 ஆயிரம் பணம் எடுத்து இருக்கிறாய்? என்று கேட்டு உள்ளார். அதற்கு மோகன் நான் ரூ.15 ஆயிரம் மட்டும்தான் எடுத்தேன் என்று கூறி உமாபதியிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்துள்ளார். கார்டை பார்த்த உமாபதி இது என்னுடைய கார்டு கிடையாது. இந்த கார்டை யார் கொடுத்தது என்று கேட்ட போது 5-ந் தேதி ஏ.டி.எம். மையத்தில் நடந்தவற்றை கூறி உள்ளார்.

இதை கேட்ட உமாபதி, உன்னிடம் மர்ம நபர் வேறு ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு என்னுடைய கார்டை எடுத்து சென்று உள்ளார். தற்போது வங்கி கணக்கில் இருந்த 65 ஆயிரம் பணத்தை எடுத்து உள்ளார் என்று கூறியபோது மோகனுக்கு ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து மோகன் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் சம்பவத்தன்று சோளிங்கர் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர். அப்போது மோகனிடம் ஒரு வாலிபர் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுப்பது தெரிய வந்தது. இதில் பதிவாகி உள்ள வாலிபரின் முகத்தை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

முதியவரை ஏமாற்றி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்து சென்ற வாலிபர் விரைவில் பிடிபடுவார் என்று அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன் தெரிவித்தார்.

Next Story