கிருஷ்ணகிரியில் தொழில் முனைவோருக்கு ரூ.12¼ கோடி கடன் உதவிகள் - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் தொழில் முனைவோருக்கு ரூ.12 கோடியே 38 லட்சம் கடன் உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு தொழில் வணிக துறை சார்பில் தர சான்றிதழ் பெற, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியம் பெறுவது குறித்த திட்ட விளக்க கையேடு வெளியிடும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு திட்ட விளக்க கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து தொழில் முதலீட்டு கழகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 14 தொழில் முனைவோருக்கு ரூ.12 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீல் அலைன்மெண்ட் மற்றும் எம்.சாண்ட் தயாரிக்கும் தொழில் மேற்கொள்ள 2 பேருக்கு ரூ.2 கோடியே 90 லட்சமும், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தையல் தொழில், ஆடை தயாரித்தல், மளிகை கடை, போட்டோ ஸ்டூடியோ, தொழில்கள் மேற்கொள்ள 8 பேருக்கு ரூ.10 லட்சம் கடன் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் 4 பேருக்கு ரூ.9 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரம் மதிப்புள்ள கடன் உதவி என மொத்தம் 14 பேருக்கு ரூ.12 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள், மானியங்கள் குறித்த விளக்கவுரை மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானிய திட்டம் குறித்து வங்கியாளர்கள், தொழில் சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பேசினர். அவர்கள் திட்டங்களின் மூலம் பயன்பெற உள்ள வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட தொழில் முதலீட்டு கழக மேலாளர் மோகன், முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், தாட்கோ மேலாளர் சுந்தரம், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தலைவர் வேல்முருகன், கிருஷ்டியா தலைவர் விஸ்வநாதன், துணை தலைவர் சிவகுமார், கிருஷ்மா தலைவர் ஞானசேகரன், ராமமூர்ததி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆய்வாளர் சுப்பையா பாண்டியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story