ராணிபென்னூர் தொகுதி பா.ஜனதாவினர் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
ராணிபென்னூர் தொகுதி பா.ஜனதாவினர், முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
ராணிபென்னூர் தொகுதி பா.ஜனதாவினர், முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பசவராஜ் கெலகாரவுக்கு டிக்கெட் வழங்குமாறு வலியுறுத்தினர்.
முற்றுகை போராட்டம்
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராணிபென்னூர் உள்பட 15 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் ராணிபென்னூர் தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த பசவராஜ் கெலகாரவின் ஆதரவாளர்கள் முதல்-மந்திரியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உடனே முதல்-மந்திரி எடியூரப்பா போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ராணிபென்னூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருண்குமார் புஜாராவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றும்படி அறிவுறுத்தினார். இதற்கு பசவராஜ் கெலகார ஆதரவாளர்கள், அருண்குமார் புஜாரா மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும், அதனால் பசவராஜ் கெலகாரவுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதை ஏற்க எடியூரப்பா மறுத்துவிட்டார்.
பா.ஜனதா வெற்றி
இந்த சந்திப்புக்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் ஒசக்கோட்டையில் பா.ஜனதா சார்பில் எம்.டி.பி.நாகராஜ் போட்டியிடுகிறார். எங்கள் கட்சியை சேர்ந்த சரத் பச்சேகவுடா சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார். அவரை கட்சியை விட்டு நீக்குவோம். அவர் 100 சதவீதம் தோல்வி அடைவது உறுதி. எனக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சித்தராமையா புகார் அளித்துள்ளார். இதற்கு என்ன மரியாதை உள்ளது?.
காங்கிரசாருக்கு வேறு வேலை இல்லை. அதனால் எனக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒசக்கோட்டையில் எம்.டி.பி. நாகராஜ் நேர்மையானவர். அவர் வெற்றி பெறுவது உறுதி. இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.
பிரசாரம் செய்வேன்
நான் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன். எம்.டி.பி.நாகராஜ் நாளை (இன்று) ஒசக்கோட்டையில் மனு தாக்கல் செய்கிறார். இதில் நான் கலந்து கொள்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story