தமிழக பஸ்கள் பொம்மசந்திராவில் நிறுத்தப்படும் பெங்களூருவில் 8 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் மெட்ரோ, ரெயில் நிலையத்துடன் இணைக்க திட்டம்
பெங்களூருவில் 8 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. தமிழக பஸ்கள் பொம்மசந்திராவில் நிறுத்தப்பட உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் 8 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. தமிழக பஸ்கள் பொம்மசந்திராவில் நிறுத்தப்பட உள்ளது.
மெட்ரோ ரெயில்
பெங்களூருவில் மக்கள்தொகை ஒரு கோடியை தாண்டி சென்றுவிட்டது. நகரில் வாகனங்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலால் மக்கள் படும் பாடு சொல்லிமாளாது. இந்த நெரிசல், பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய சவாலாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்துகிறது.
நகரில் தற்போது 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 116 கிலோ மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2021-ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா (ஓசூர் ரோடு) வரை பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
புதிய பஸ் நிலையங்கள்
இந்த நிலையில் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு நகர நில போக்குவரத்து இயக்குனரகம், போக்குவரத்து மையங்களை (டிரான்சிட் ஹப்) அமைக்க பெங்களூரு நகருக்குள் நுழையும் பகுதிகளில் 8 இடங்களை அடையாளம் கண்டுள்ளது. அதில் ஓசூர் ரோட்டில் உள்ள பொம்மசந்திராவில் ஒரு பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு அமையும் மெட்ரோ ரெயில் பணிமனை அருகே பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அந்த பஸ் நிலையம் மற்றும் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈலளிகே ரெயில் நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ஓசூர் பகுதியில் இருந்து ரெயிலில் வருபவர்கள் ஈலளிகே ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ் மூலம் பொம்மசந்திரா மெட்ரோ நிலையத்திற்கு வந்துசேர முடியும்.
நேரடியாக இணைக்க திட்டம்
மேலும் பொம்மசந்திராவில் அமைக்கப்படும் பஸ் நிலையத்தில், சென்னை, சேலம், நெல்லை, நாகர்கோவில் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் பஸ்கள் நிறுத்தப்படும். அதே போல் சல்லகட்டா, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம், பீனியா, பழைய மெட்ராஸ் ரோடு, பல்லாரி ரோடு, காடுகோடி ஆகிய இடங்களிலும் பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து நகர நில போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:-
எங்கெங்கு முடியுமோ அங்கு ரெயில் நிலையம், பஸ் நிலையம், மெட்ரோ நிலையங்களை இணைக்கும் பணிக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். முடிந்தவரை போக்குவரத்து மையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்தின் டிக்கெட் வழங்கும் மாடி (கான்கோர்ஸ் ஏரியா) வரை நேரடியாக இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பயணிகளின் நேரம் மிச்சமாகும். இந்த வசதியை ஏற்படுத்த வாய்ப்பு இல்லாத இடங்களில் வேறு வசதியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தனியார் பஸ் நிலையம்
இந்த பஸ் நிலையங்களில் கார், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தவும், வாடகை கார்கள், ஆட்டோக்களை நிறுத்தவும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். போக்குவரத்து மையங்கள் அமையும் பகுதிகளில் தனியார் பஸ் நிலையம் அமைக்கவும் இடவசதி ஏற்படுத்தி வழங்கப்படும். இந்த பஸ் நிலையங்களை அமைக்கும் பணிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலையங்களில் ஓய்வு அறை, பயணிகளுக்கு பாதுகாப்பு, குளியலறையுடன் கழிவறை, பொருட்கள் வைக்கப்படும் பெட்டக வசதி, உணவு கூடங்கள், சிறிய கடைகள், வணிக நடவடிக்கைகள், உதவி மையம் போன்றவை இடம் பெறும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story