மாவட்ட செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம் + "||" + From Singapore In the case of the abduction of a youth from Chennai 6 arrested

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த கடலூர் வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். உறவினரிடம் நகையை வாங்கி வைத்துக்கொண்டு தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடந்த 14-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீரப்பாளையத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவருடைய மகன் தணிகைவேல்(வயது 26) என்பவரை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்று ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டியது. அவர் பணம் இல்லை என்றதால் அவரது தந்தை கலியமூர்த்தியிடம் செல்போனில் பேசி பணம் கேட்டு மிரட்டியது.


இதுபற்றி கலியமூர்த்தி அளித்த புகாரின்பேரில் கடலூர் மாவட்ட போலீசார் மற்றும் சென்னை விமான நிலைய போலீசார், கலியமூர்த்தி மூலமாக கடத்தல் கும்பலை கீரப்பாளையத்துக்கு வரவழைத்தனர். அதன்படி அங்கு வந்த கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த போலீசார், கடத்தப்பட்ட தணிகைவேலை மீட்டனர்.

இது தொடர்பாக நாகூரைச் சேர்ந்த சாகுல்அமீது(27), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் அமீது(27), முகமது இப்ராகிம் (29), அப்துல் பாசித்(22), பசூலூர் ரகுமான்(27), கடலூரை சேர்ந்த திருமலை(45) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் நடேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் கடலூர் சென்று கைதான 6 பேரையும் சென்னை அழைத்து விசாரித்தனர். கைதான சாகுல் அமீது, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

சிங்கப்பூரில் கடந்த ஒரு வருடமாக வெல்டராக வேலை பார்த்து வந்த தணிகைவேல் சொந்த ஊருக்கு திரும்பி வருவதாக தகவல் அறிந்ததும், சிங்கப்பூரில் உள்ள எனது உறவினர் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை அவரிடம் கொடுத்து, சென்னை விமான நிலையம் வந்ததும் அவரிடம் வாங்கிக்கொள்ளும்படி எனக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் தணிகைவேல், சிங்கப்பூரில் விமானம் ஏறுவதற்கு முன்பே எனது உறவினர் கொடுத்த நகைகள் தொலைந்துவிட்டதாக அவரிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். இதுபற்றி எனது உறவினர் எனக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சென்னை விமான நிலையம் வந்த தணிகைவேலிடம் நான், உறவினர் கொடுத்தனுப்பிய ரூ.7 லட்சம் நகையை கேட்டபோதும், அது தொலைந்துவிட்டதாக கூறினார். நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு தொலைந்துபோனதாக நாடகம் ஆடியதால் தணிகைவேலை கடத்தி அவரிடமும், அவரது தந்தையிடமும் நகைக்கு பதிலாக ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டினோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைதான 6 பேரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.