கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 18 Nov 2019 4:00 AM IST (Updated: 18 Nov 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து நேற்று விரதம் தொடங்கினர்.

தென்காசி, 

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து நேற்று விரதம் தொடங்கினர்.

அய்யப்ப பக்தர்கள் விரதம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் குற்றால அருவியில் குளித்துவிட்டு நேற்று காலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு தென்காசி வழியாக செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வார்கள். இன்னும் இரண்டு மாதங்கள் குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அருவிக்கரையில் அடிக்கடி சரண கோ‌‌ஷங்கள் ஒலிக்கும். அய்யப்ப பக்தர்கள் இரவு பகலாக குற்றாலம் வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு நேற்று அதிகாலையில் சென்று தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி மாலை அணிந்தனர். பாளையங்கோட்டை பொதிகைநகரில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதைத்தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

இதேபோல் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். நேற்று காலை முதல் தெருக்களிலும், வீதிகளிலும் “சாமியே சரணம் அய்யப்பா“ என்ற பக்தி கோ‌‌ஷங்களும், பக்தி பாடல்களும் ஒலிக்க தொடங்கிவிட்டன. நெல்லை சந்திப்பில் உள்ள சாலைகுமாரசாமி கோவில், டவுன் சந்திவிநாயகர் கோவில், நெல்லையப்பர் கோவிலிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

Next Story