ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி, டெங்கு வார்டில் டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆய்வு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு வார்டில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பெருகி விட்டன. பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களால் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரத்யேக பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் தலைமை ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
அங்கு டெங்கு வார்டு மற்றும் காய்ச்சல் நோய்களுக்கான வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது அவருடன் அ.தி.மு.க.வை சேர்ந்த தஞ்சி சுரேஷ், முத்துபாண்டியன், ஆதில்அமீன் உள்பட பலர் உடன் சென்றிருந்தனர்.
Related Tags :
Next Story