பெண்களிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
திருச்சியில் பெண்களிடம் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி கண்டோன்மெண்ட் அலெக்சாண்ட்ரியாரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பழனிவேல். இவருடைய மனைவி மாரிக்கண்ணு(வயது 42). இவர் சம்பவத்தன்று அதிகாலை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், அவரிடம் இருந்து 10 பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று காலை திருச்சி-திண்டுக்கல்ரோடு அரிஸ்டோ ரவுண்டானா அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் காரைக் குடியை சேர்ந்த ராஜ கோபால்(30) என்பதும், இவர் தான் மாரிக்கண்ணுவிடம் இருந்து சங்கிலி பறித்தார் என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் இவர், கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி புதுக்கோட்டை ரோட்டில் விமானநிலையம் அருகே ஒரு பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறித்ததையும், செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே ராயல்ரோட்டில் ஒரு பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறித்ததையும், அதற்கு அடுத்தநாள் 16-ந் தேதி தலைமை தபால் நிலையம் அருகே ஒரு பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறித்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 25 பவுன் தங்க சங்கிலிகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோல் திருச்சி திரு வானைக்காவல் பகுதியை சேர்ந்த முத்தம்மாள் தனது மகள் புஷ்பலதாவுடன் (36) நேற்று முன்தினம் இரவு திருவானைக்காவல் ராஜகணபதி கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செல்வராஜ்(39) என்பவர் அவர்களிடம் சங்கிலி பறிக்க முயன்றார். அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story