குளிக்கச் சென்றபோது பரிதாபம்: மதுரை வைகை ஆற்றில் மூழ்கிய மாணவனின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்


குளிக்கச் சென்றபோது பரிதாபம்: மதுரை வைகை ஆற்றில் மூழ்கிய மாணவனின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Nov 2019 11:00 PM GMT (Updated: 17 Nov 2019 8:48 PM GMT)

மதுரை வைகை ஆற்றில் குளித்த மாணவன் மாயமானதை தொடர்ந்து அவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை,

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. வெள்ளப் பெருக்கின் காரணமாக, கல் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், மதிச்சியம் பகுதியையும், முனிச்சாலை பகுதியையும் இணைக்கும் ஓபுளா படித்துறை பாலத்திலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வைகை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை ஆற்றங்கரைகளிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல், ஆற்றில் குளிக்கவும், வாகனங்களை கழுவுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவை ேசர்ந்தவர் குமார். இவரது மகன் பால முருகன் (வயது 10) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் பாலமுருகன் குளிக்க சென்றான்.

ஆற்றில் இறங்கி குளித்த போது அவன் திடீரென மாயமானான். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story