தினத்தந்தி செய்தி எதிரொலி, அரிச்சல்முனைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


தினத்தந்தி செய்தி எதிரொலி, அரிச்சல்முனைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Nov 2019 10:00 PM GMT (Updated: 17 Nov 2019 9:08 PM GMT)

‘தினத்தந்தி செய்தி’ எதிரொலியால் அரிச்சல்முனை வரை வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி. கடல் கொந்தளிப்பால் கடந்த மாதம் 19-ந் தேதி அன்று அரிச்சல்முனை கடற்கரையில் உள்ள சாலையின் தடுப்பு சுவர் நடைபாதை மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு இறங்கி செல்லும் படிக்கட்டுகள் சேதமடைந்தன.

அதை தொடர்ந்து அன்றிலிருந்து அரிச்சல்முனை வரை செல்ல சுற்றுலா பயணிகள் ்மற்றும்அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கம்பிபாடு பகுதியிலேயே அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதைத்ெதாடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேதமான பகுதிகள் சீரமைக்கப்பட்டன.

சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு துறை அதிகாரிகள் குடும்பத்தோடு வரும் வாகனங்கள் மட்டும் அரிச்சல்முனை வரை சென்று வர அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து நேற்று தினத்தந்தி நாளிதழில், அரிச்சல்முனை வரை அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக அரிச்சல்முனை வரை அனைத்து வாகனங்களும் சென்று வர நேற்று முதல் அனுமதிக்கப்பட்டன. இதனால் அரசு பஸ் மற்றும் கார், வேன், உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நேற்று முதல் அரிச்சல்முனைக்கு சென்றன.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதன் காரணமாக அரிச்சல்முனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அவர்கள் கடல்கள் ஒன்று சேரும் இடத்தையும், மணல் பரப்பாக இருந்த பகுதியில் கடல் நீர் சூழ்ந்து இருந்ததையும் பார்த்து ரசித்தனர். மேலும் கடல்கள் சேரும் இடத்தின் அருகே நின்று செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

ஆனால் பாதுகாப்பு பணியில் போலீசார் யாரும் இல்லை. ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தார். அவரால் கடலில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே அரிச்சல்முனை பகுதியில் கூடுதலான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story