ஆரல்வாய்மொழி அருகே, கணவனின் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய இளம்பெண் - போலீசார் விசாரணை
ஆரல்வாய்மொழி அருகே கணவனின் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய இளம்பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரை சேர்ந்த தொழிலாளிக்கு 30 வயதுடைய மனைவி உண்டு. இந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களின் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதனை வாலிபரின் மனைவி தட்டிக்கேட்டார். இதனால், இரு வீட்டாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதல் ஜோடி செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இதை வாலிபரின் மனைவி கவனித்து கொண்டிருந்தார்.
நேற்று காலையில் வாலிபரின் மனைவி, கணவனின் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார். இதனால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளம்பெண், கணவனின் கள்ளக்காதலியை கத்தியால் குத்தினார். காயமடைந்த கள்ளக்காதலி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வாலிபரின் மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவனின் கள்ளக்காதலியை இளம்பெண் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story