நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு, ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரெயிலில் அதிகாலையில் சிலர் ரேஷன் அரிசி கடத்த திட்டமிட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் சதானந்தன் தலைமையில், துணை தாசில்தார் அருள்லிங்கம் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு திடீரென சென்றனர்.
பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக தயார் நிலையில் நின்று கொண்டிருந்த ரெயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது சில ரெயில் பெட்டிகளின் இருக்கைகளுக்கு அடியில் சிறு, சிறு மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தபோது அந்த மூடைகளில் 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அந்த அரிசியை யாரும் சொந்தம் கொண்டாட வில்லை. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து, கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ரெயில் பெட்டியில் இருந்த அரிசி மூடைகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்துள்ளனர். அதிகாரிகளைப் பார்த்ததும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த அரிசி மூடைகளை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.
Related Tags :
Next Story