பெரியகுளம் அருகே, குடிமராமத்து திட்டப் பணியில் முறைகேடு - கலெக்டரிடம், விவசாயிகள் புகார்


பெரியகுளம் அருகே, குடிமராமத்து திட்டப் பணியில் முறைகேடு - கலெக்டரிடம், விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:15 PM GMT (Updated: 18 Nov 2019 2:59 PM GMT)

பெரியகுளம் அருகே குடிமராமத்து திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக கலெக்டரிடம், விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், 215 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7,100 மதிப்பில் மின்மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘திம்மரசநாயக்கனூர் ஊராட்சியில் திம்மரசநாயக்கனூர், தி.பொம்மிநாயக்கன்பட்டி, த.மல்லையாபுரம், பிள்ளைமுகப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. மக்கள் குறைகளை கூறச் சென்றால், ஊராட்சி அலுவலகம் பூட்டிய நிலையில் தான் இருக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

ஆண்டிப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘5-வது வார்டில் மீனாட்சிசுந்தரம் நாடார் தெருவில் தனியார் செல்போன் நிறுவன கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், மக்களுக்கும், பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, இந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டையை சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘இ.புதுக்கோட்டையில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதில் முறைகேடு நடந்துள்ளது. மேலும், இந்த கண்மாயில் முறையான அனுமதியின்றி சிலர் மீன்குஞ்சுகள் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இதற்காக கண்மாய் கரையை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த குலாலர் மகாசபை, மாவட்ட நுகர்வோர் மற்றும் லஞ்சம், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு அமைப்பு, 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘காமயகவுண்டன்பட்டியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களின் அமைதி பாதிப்பும், சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இங்கு டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ் அளித்த மனுவில், ‘வி.சி.புரத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் அரசு விதிகளுக்கு மாறாக மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி மாணவர்களிடம் வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜதுரை, கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி அல்லிநகரம் நகராட்சியில் நீர்நிலைகள், பஸ் நிலையங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையும் உள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் வருவாய்த்துறை உள்பட அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்ப்புலிகள் கட்சியின் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் பாலா தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘தென்கரை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Next Story