உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜனதா தலைமை முடிவு செய்யும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜனதா தலைமை முடிவு செய்யும் என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நெல்லை,
வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் வ.உ.சி. மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் வ.உ.சிதம்பரனார். தியாகி வ.உ.சி.யின் லட்சியத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் மோடி ஆட்சி நடத்தி வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிகமாக இடங்களை கைப்பற்றும் அளவுக்கு விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிடும் அளவுக்கு பா.ஜனதா வலுப்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். இடைதேர்தலில் ஆதரவு கொடுத்தோம். வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுத்து அறிவிக்கும்.
எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தபோது முதல்-அமைச்சர் ஆவேன் என எதிர்பார்த்து இருக்க மாட்டார். அந்த கால கட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் அது நடந்தது. அதபோல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவேன் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். அரசியலில் ஏற்பட்ட வெற்றிடம் அவரை முதல்-அமைச்சராக்கி உள்ளது.
பா.ஜனதா மாநில தலைமை குறித்து அகில இந்திய தலைமை முடிவை அறிவிக்கும். ரஜினி, கமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்களா? என்று எனக்கு தெரியாது. தமிழகத்தில் அடுத்து வர இருக்கும் ஆட்சி பா.ஜனதா கூட்டணி ஆட்சியாக இருக்கும். ஊழல் இல்லாத தூய்மையான ஆட்சி அமைக்க பா.ஜனதாவால் தான் முடியும்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story