ஸ்ரீபெரும்புதூர் அருகே லோடு வேன்-கன்டெய்னர் லாரி மோதல்; டிரைவர் பலி 3 பேர் படுகாயம்


ஸ்ரீபெரும்புதூர் அருகே லோடு வேன்-கன்டெய்னர் லாரி மோதல்; டிரைவர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Nov 2019 4:15 AM IST (Updated: 18 Nov 2019 11:37 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற லோடு வேன் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் வேன் டிரைவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் அடுத்த சீயாட் காரை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள பால் கம்பெனியில் லோடு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி (27). இவர் மணிமாறனுக்கு உதவியாக இருந்து வந்தார். நேற்று அதிகாலை மணிமாறன் மற்றும் உமாபதி இருவரும் காஞ்சீபுரத்தில் இருந்து பால் கேன்களை ஏற்றி கொண்டு லோடு வேனில் சென்னை நோக்கி வந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வந்த போது, லோடுவேன் திடீரென பழுதாகி சாலையில் நின்றது. அதன் பின்னர், பழுதாகி நின்ற வண்டியை மணிமாறன், உமாபதி மற்றும் தனது நண்பர்களான காஞ்சீபுரத்தை சேர்ந்த சண்முகம் (28), தங்கராஜ் (30) ஆகியோருடன் சேர்ந்து தள்ளி கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று 4 பேரும் தள்ளிச்சென்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட மணிமாறன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். உமாபதி, சண்முகம், தங்கராஜ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.

Next Story