சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந் தேதி கடைசி நாள் - கலெக்டர் தகவல்


சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந் தேதி கடைசி நாள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:00 PM GMT (Updated: 18 Nov 2019 8:00 PM GMT)

சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- நடப்பு ஆண்டில் ஜுலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் இயல்பான அளவை விட கூடுதலான அளவு மழை பெய்துள்ளதால், மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு நடைபெறும் பகுதிகளில் அனைத்தும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கண்மாய் ஆயக்கட்டு பகுதிகளில் நாற்றங்கால் அமைத்து நெல் நடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நடப்பு சம்பா பருவத்தில் இதுவரையில் சுமார் 55 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசு பொது சேவை மையங்கள் மூலமாக பயிர் காப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சுமார் 5 ஆயிரத்து 989 ஏக்கர் நெல்பயிர் மட்டுமே விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் பங்கு பெறச் செய்ய வலியுறுத்தி வேளாண்துறை அலுவலர்களால் கிராம அளவிலான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எதிர்பாராத விதமாக ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளம் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதை குறிக்கோளாக கொண்டுதான் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய இயற்கை சீற்றங்கள் எப்போது ஏற்படும் என்று கணிக்க இயலாது என்பதால், அவ்வாறு ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு காப்பீட்டு பிரீமிய தொகை ரூ.390 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும், பயிர் காப்பீடு செய்வதை சாகுபடி செலவினங்களில் ஒரு இனமாக கருதி, தாமதமின்றி தங்களது நெல் பயிரை காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயிர் காப்பீடு செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கான அடங்கல் அறிக்கைகள் வழங்க தேவையான மூவிதழ் அடங்கல் புத்தகங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே கடைசி நேரம் வரை காத்திருக்காமல் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி, தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கான அடங்கல் அறிக்கையினை பெற்று பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story