உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 10:45 PM GMT (Updated: 18 Nov 2019 8:00 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

நெல்லை,

வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.மு.மு.க. போட்டியிடும். இந்த தேர்தல் தொடர்பாக வருகிற 22-ந் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்படும்.

ரஜினிகாந்த், தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என கூறியிருப்பது உண்மை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவேன் என நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்று அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உள்ளது ஒரு கம்பெனி தான். கட்சி இல்லை. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்.

எங்களது கட்சியை டெல்லி தேர்தல் கமி‌‌ஷனிடம் பதிவு செய்துள்ளோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு நினைவூட்டல் கடிதம் இன்று (அதாவது நேற்று) அனுப்பி உள்ளேன்.

தனிச்சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என அனைத்து நிர்வாகிகளும் விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என ஆட்டம் போடுகிறார்கள். இடைத்தேர்தலை பொறுத்த வரையில் ஆளும் கட்சியினர் வெற்றி பெறுவது அதிசயம் இல்லை. அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆட்சி இருக்கும் வரை ஆட்டம் போடுவார்கள். மேலே உள்ளவர்கள் கைவிட்டு விட்டால், இவர்கள் ஆட்டம் முடிந்து விடும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல அமைப்பு செயலாளர் மணிக்கராஜா, மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன், அமைப்பு செயலாளர் பால்கண்ணன், மேலநீலித நல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் அமிதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story