லாரியை மீட்டு தரக்கோரி, டிரைவர் உள்பட 6 பேர் தீக்குளிக்க முயற்சி - நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
நாகை கலெக்டர் அலுவலகத்தில் லாரியை மீட்டு தரக்கோரி டிரைவர் உள்பட 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்களை கொடுத்து சென்றனர். அதைத்தொடர்ந்து மாலை அலுவலக நேரம் முடிந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது கலெக்டர் கார் நிறுத்தும் நுழைவு வாயில் முன்பு டிரைவர் மற்றும் ஒரே குடும்பத்தை 5 பேர் கையில் மண்எண்ணெய் கேன் மற்றும் பாட்டில்களுடம் திடீரென அமர்ந்தனர்.
தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் 6 பேரும் மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதையடுத்து போலீசார் மண்எண்ணெய் கேன்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே சுந்தரபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 39), அவரது மனைவி கோமதி(38), அவர்களது மகள்கள் பார்கவி(13), மகிமா(11), மகன் கீர்த்திக்(10) மற்றும் சுரேசின் லாரி டிரைவர் தணிகாசலம்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் கூறியதாவது:-
எனக்கு சொந்தமான லாரியை தணிகாசலம் என்பவர் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் தணிகாசலம் கடந்த 15-ந்தேதி மணல் ஏற்றிக்கொண்டு மணல்மேடு பந்தநல்லூர் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அந்த வழியாக வந்த எனது லாரியை திருட்டு மணல் அடிப்பதாக கூறி பிடித்து விட்டனர். ஆனால் டிரைவர் அனுமதி பெற்றுதான் மணல் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
எங்களது லாரியை மீட்டு தரக்கோரி (நேற்று) காலை மனுவும் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே எனது குடும்பம், டிரைவருடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய தான் மண்எண்ணெய் கேனுடன் வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர் உள்பட 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story