கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: 15 சட்டசபை தொகுதிகளுக்கு 292 பேர் வேட்புமனு தாக்கல் - மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது


கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: 15 சட்டசபை தொகுதிகளுக்கு 292 பேர் வேட்புமனு தாக்கல் - மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 19 Nov 2019 5:51 AM IST (Updated: 19 Nov 2019 5:51 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதி களுக்கு வருகிற டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

 பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். 15 தொகுதிகளுக்கும் மொத்தம் 292 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இன்று(செவ்வாய்க்கிழமை) மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.

பெங்களூரு,

குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்றது.

17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஒசக்கோட்டை, கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், எல்லாப்பூர், விஜயநகர், காக்வாட், கோகாக், அதானி, இரேகெரூர், ராணிபென்னூர், கே.ஆர்.பேட்டை, உன்சூர், சிக்பள்ளாப்பூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டில் விசாரணை நிலுவையில் இருப்பதால், ராஜராஜேஸ்வரிநகர், மஸ்கி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. கடந்த 16-ந் தேதி வரை 96 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுவிடுமுறை. அதனால் மனு தாக்கல் நடைபெறவில்லை. இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அவர்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

ஒசக்கோட்டையில் பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் கடந்த 14-ந் தேதி மனு தாக்கல் செய்தார். சிக்பள்ளாப்பூர் பா.ஜனதா வேட்பாளர் சுதாகரும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் ஒசக்கோட்டை பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து தாசில்தார் அலுவலகத்தில் தனது 2-வது மனுவை தாக்கல் செய்தார். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா உடன் இருந்தார்.

அதுபோல் சிவாஜிநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எம்.சரவணா, காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத் ஆகியோர் நேற்று குயின்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத் மனு தாக்கலுக்கு முன்பு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது என்.ஏ.ஹாரீஷ் எம்.எல்.ஏ., ஐவான் டிசோசா எம்.எல்.சி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ரிஸ்வான் ஹர்ஷத் மனு தாக்கலின்போது, காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் உடன் இருந்தார்.

தமிழரான பா.ஜனதா வேட்பாளர் எம்.சரவணாவும் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே போல் கே.ஆர்.புரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பைரதி பசவராஜ், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி ஆகியோர் ஊர்வலமாக வந்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இரு கட்சியினரும் ஊர்வலம் நடத்தியதால், பழைய மெட்ராஸ் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகனங்கள் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். கே.ஆர்.பேட்டை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நாராயணகவுடா, ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் தேவராஜ் ஆகியோர் நேற்று ஊர்வலமாக வந்து தாசில்தார் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உன்சூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எச்.விஸ்வநாத் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். அப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, பிரதாப் சிம்ஹா ஆகியோர் உடன் இருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் எச்.பி.மஞ்சுநாத், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சோமசேகர் ஆகியோரும் நேற்று மனு தாக்கல் செய்தனர். இரேகெரூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பி.சி.பட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் பி.எச்.பன்னிகோட் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் கப்பினகந்தி மடாதிபதி சிவலிங்க சிவாச்சார்ய சுவாமி ஆகியோர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். மேலும் அதே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரின் மகள் சுருஷ்டி பட்டீல் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.

சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுதாகர், காங்கிரஸ் சார்பில் எம்.அஞ்சனப்பா, ஜனதா தளம்(எஸ்) சார்பில் கே.பி. பச்சேகவுடா ஆகியோர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். பா.ஜனதா ஊர்வலத்தில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், ஜனதா தளம்(எஸ்) ஊர்வலத்தில் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிக்பள்ளாப்பூர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் 2-வது வேட்பாளராக ராதாகிருஷ்ணா என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் இந்த 2 பேரில் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களத்தில் இருப்பார் என்பது 21-ந் தேதிக்குள் தெரியவரும்.

விஜயநகர் தொகுதியில் ஆனந்த்சிங்(பா.ஜனதா), வெங்கடராவ் கோர்படே(காங்கிரஸ்), என்.எம்.நபி(ஜனதா தளம்-எஸ்) ஆகியோர் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் கோபாலய்யா, காங்கிரஸ் வேட்பாளர் எம்.சிவராஜ், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் கிரிஷ் நாசி ஆகியோரும் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். அப்போது முன்னாள் பிரதமர் தேவேகவுடா உடன் இருந்தார்.

யஷ்வந்தபுரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எஸ்.டி.சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளர் பி.நாகராஜ், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் ஜவராயிகவுடா ஆகியோர் கட்சி தொண்டர்களுடன் தனித்தனியாக ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். கோகாக் தொகுதியில் பா.ஜனதா சார்பில் ரமேஷ் ஜார்கிகோளி, காங்கிரஸ் சார்பில் அவரது சகோதரர் லகன் ஜார்கிகோளி மற்றும் ஜனதா தளம்(எஸ்) சார்பில் அசோக் பூஜாரி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சதீஸ் ஜார்கிகோளியும் மனு தாக்கல் செய்துள்ளார். லகன் ஜார்கிகோளி தாக்கல் செய்த மனுவில் குறைபாடுகள் இருந்ததை அடுத்து அவர் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதானி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் குமடள்ளி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். அவருடன் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் அவர், நீண்ட நேரத்திற்கு பிறகு கடைசி நேரத்தில் ஊர்வலத்தில் வந்து பங்கேற்றார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கஜானன மங்கசுலி ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். காக்வாட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஸ்ரீமந்த்பட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் ராஜூ காகே ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

ராணிபென்னூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அருண்குமார் புஜாரா, காங்கிரஸ் சார்பில் கே.பி.கோலிவாட், ஜனதா தளம்(எஸ்) சார்பில் மல்லிகார்ஜுன ஹலகேரி ஆகியோர் நேற்று ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர். எல்லாப்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சிவராம் ஹெப்பார், காங்கிரஸ் வேட்பாளர் பீமண்ணா நாயக், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் சைத்ரா கவுடா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

மொத்தத்தில் கடைசி நாளான நேற்று பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அனைத்துக்கட்சிகளின் வேட்பாளர்களும் ஊர்வலம் நடத்தியதால், அந்தந்த பகுதிகளில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் மொத்தம் 292 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஒசகோட்டை தொகுதியில் 33 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் 4 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் அதானியில் 25 பேரும், சிக்பள்ளாப்பூரில் 21 பேரும், கோகாக்கில் 24 பேரும், இரேகெரூரில் 18 பேரும், உன்சூரில் 31 பேரும், கே.ஆர்.புராவில் 10 பேரும், காக்வாட்டில் 17 பேரும், கே.ஆர்.பேட்டையில் 15 பேரும், ராணிபென்னூரில் 21 பேரும், சிவாஜிநகரில் 18 பேரும், விஜயநகரில் 13 பேரும், எல்லாப்பூரில் 20 பேரும், யஷ்வந்தபுரத்தில் 22 பேரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மனுக்கள் பரிசீலனை, மனுக்களை வாபஸ் பெற 21-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி பட்டியல் வெளியாகும்.

Next Story