காரில் கடத்தப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள்- சாராயம் பறிமுதல் டிரைவர் கைது


காரில் கடத்தப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள்- சாராயம் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 7:19 PM GMT)

பொறையாறு அருகே காரில் கடத்தப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம், பொறையாறு அருகே நண்டலாறு சோதனைசாவடியில் நேற்று காலை போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்த முயற்சித்தனர்.

ஆனால், போலீசாரை கண்டதும் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். உடனே போலீசார், அந்த காரை பின் தொடர்ந்து சென்று பொறையாறு ராஜீவ்புரம் என்ற இடத்தில் மடக்கினர். அப்போது காரில் இருந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடி விட்டார். டிரைவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். காரை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 16 அட்டை பெட்டிகள் மற்றும் 6 சாக்கு மூட்டைகளில் 2 ஆயிரம் மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றது தெரியவந்தது.

கைது

இதைத்தொடர்ந்து பிடிபட்ட டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணயில் அவர், மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் தெருவை சேர்ந்த கலியபெருமாள் (வயது 40) என்பதும், தப்பி ஓடியவர் சாராய வியாபாரி சீர்காழியை சேர்ந்த ரமே‌‌ஷ் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு கலியபெருமாளை கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story