சீராக குடிநீர் வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை - அதிகாரிகளின் வாகனங்கள் சிறைபிடிப்பு


சீராக குடிநீர் வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை - அதிகாரிகளின் வாகனங்கள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

காரமடையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை அருகில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி 11 மற்றும் 12-வது வார்டுக்கு உட்பட்ட எத்திராஜ் நகர், மகாலட்சுமி நகர், பாண்டியன் நகர், கண்ணப்பன் லே அவுட், பாயப்பனூர், சேரன் நகர் 2, அம்மன் நகர் உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 3,500 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன.

இந்த பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருப்பூர் குடிநீர் திட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி ஆகிய 3 திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

ஊராட்சி நிர்வாகம் மட்டும் இந்த பகுதிகளுக்கு தற்போது குடிநீர் வழங்கி வருகிறது. இந்த குடிநீரும் 10 நாட்களுக்கு ஒருமுறை 6 மணி நேரம் மட்டுமே வினியோகம் செய்வதால் பொதுமக்கள் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 25 நாட்களாக இப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே பழைய முறைப்படி 3 திட்டங்கள் மூலமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் வந்து காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலை 10 மணியளவில் முற்றுகையிட்டனர். அவர்கள் பாடை கட்டி, ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, சைலஜா, கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் சாந்தாமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் பிரேம்நாத், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பவானி ஆற்று நீர் செம்மண் கலந்து வருவதால் தண்ணீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் திட்ட குடிநீர் குழாயில் 19 இடங்களில் உடைப்பு உள்ளது. அதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளிகுப்பம் பாளையத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றனர்.

இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறி ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது. இதையடுத்து அதிகாரிகள் வேறு வாகனங்களை வரவழைத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மாலை 6 மணி அளவில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story