ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Nov 2019 4:30 AM IST (Updated: 20 Nov 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்கிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மெயின் ரோட்டில் மகாதானபுரத்தில் 2 ரேஷன் கடைகள் ஒரே இடத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தலா 1,600 ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, சீனி, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ரேஷன் கடைகளில் இருந்து ஒரு ரேஷன் கார்டுக்கு மாதம்தோறும் தலா 1 லிட்டர் மண்எண்ணெய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ரேஷன் கடைகளுக்கு குறைவான அளவு மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மாதம் ஒருமுறை மட்டுமே இங்கு மண்எண்ணெய் வினியோகம் செய்யப்படும். எனவே, மண்எண்ணெய் வினியோகம் செய்யும் நாளில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதிலும், முன்கூட்டியே வந்து காத்து நிற்பவர்களுக்கு மட்டுமே மண்எண்ணெய் கிடைக்கிறது.

2 பெண்கள் மயக்கம்

இந்த நிலையில் நேற்று இந்த 2 கடைகளிலும் ஒரே நேரத்தில் மண்எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், 2 ரேஷன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மண்எண்ணெய் வாங்கிய 2 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

உடனே, அருகில் நின்றவர்கள் அவர்களை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மண்எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. 1 மணி நேரத்தில் மண்எண்ணெய் தீர்ந்ததால் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் மண்எண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருந்த பல பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story